சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி பொறுப்பேற்பு

சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட வினீத் கோத்தாரி, இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தகில் ரமாணியை மேகாலயாவுக்கு மாற்ற கொலிஜியம் பரிந்துரைத்தது. அவருக்குப் பதில் மேகாலயா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியான அஜய் குமார் மிட்டலை சென்னைக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டது.இந்த நிலையில், தனது பணியிட மாற்றப் பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு தகில் ரமாணி விடுத்த கோரிக்கையை கொலிஜியம் நிராகரித்ததால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமிக்கப்பட்டார்.அவரது புகைப்படம் மற்றும் சுய விவரங்களுடன், மற்ற 56 நீதிபதிகளின் புகைப்படங்கள் மற்றும் விவரங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தின் இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன. வெள்ளிக்கிழமை அன்று பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட வினீத் கோத்தாரி இன்று தலைமை நீதிபதி அறையில் அமர்ந்து நீதிபதி ராமதிலகத்துடன் வழக்குகளை விசாரிக்கிறார்.உயர்நீதிமன்ற நிர்வாக பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். தலைமை நீதிபதியை நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து, அவர் பதவியேற்கும் வரை, பொறுப்பு தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி செயல்படுவார்.